நான் நிச்சயமாக திரும்பி வருவேன் - பிரித்வி ஷா விரக்தி!
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடருக்கான மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நட்சத்திர வீரர் பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்தியாவில் புகழ்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்று விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடர். இத்தொடரின் நடப்பு சீசனானது எதிர்வரும் டிசம்பர் 21ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. மொத்தம் 38 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது 5 குழுக்களாக பிரிக்கபட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளை மாநில கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடப்பு சீசன் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடருக்கான மும்பை அணியை மும்பை கிரிக்கெட் சங்கம் இன்று அறிவித்துள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மும்பை அணியில் நட்சத்திர வீரர் அஜிங்கியா ரஹானே கேட்டுக்கொண்டதன் பேரில் அவருக்கு இத்தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
Trending
இதன் கரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு இந்த அணியில் சூர்யகுமார் யாதவ், ஷிவம் தூபே, ஷர்துல் தாக்கூர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் தங்கள் இடங்களைப் பிடித்துள்ளனர். மேற்கொண்டு யு19 ஆசிய கோப்பை தொடரில் விளையாடி வந்த தொடக்க வீரர் ஆயூஷ் மாத்ரேவும் மும்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் பிரித்வி ஷாவுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
ஏற்கெனவே உடற்தகுதி காரணங்களால் மும்பை ரஞ்சி அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்த பிரித்வி ஷா, நடைபெற்று முடிந்த சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரில் அணியின் தொடக்க வீரராக விளையாடி வந்தார். இருப்பினும் இத்தொடரில் அவரால் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறினார். இந்நிலையில் தான் தற்சமயம் விஜய் ஹசாரே கோப்பை தொடருக்கான மும்பை அணியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மும்பை அணியில் இடம் கிடைக்காதது குறித்து பிரித்வி ஷா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “சொல்லுங்கள் கடவுளே, நான் இன்னும் என்ன செய்ய வேண்டும். 65 இன்னிங்ஸில், 126 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 55.7 சராசரியில் 3,399 ரன்கள் எடுத்த நிலையிலும் என்னால் அணிக்கு தேர்வாக முடியவில்லை. ஆனால் நான் உங்கள் மீது என் நம்பிக்கையை வைத்திருப்பேன், மக்கள் இன்னும் என்னை நம்புவார்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால் நான் நிச்சயமாக திரும்பி வருவேன்” என்று பதிவிட்டுள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
மும்பை அணி: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஆயுஷ் மாத்ரே, ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஜெய் பிஸ்டா, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, சூர்யன்ஷ் ஷெட்ஜ், சித்தேஷ் லாட், ஹர்திக் தாமோர், பிரசாத் பவார், அதர்வா அன்கோலேகர், தனுஷ் கோட்டியான், ஷர்துல் தாக்கூர், ராய்ஸ்டன் டயஸ், ஜுனேத் கான், ஹர்ஷ் தன்னா, விநாயக் போயர்.
Win Big, Make Your Cricket Tales Now