இந்தியாவுக்காக விளையாடியிருந்தால் ஆயிரம் விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பேன் - சயீத் அஜ்மல்!
பிசிசிஐ போன்ற வலிமையான கிரிக்கெட் வாரியத்திற்காக தான் விளையாடியிருந்தால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 1000 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பேன் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல் தெரிவித்திருக்கிறார்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல் உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக வலம் வந்தவர் . குறிப்பாக டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது தூஸ்ராவின் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்தவர் . உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக இவர் விளங்கி வந்தாலும் அடிக்கடி பந்துவீச்சு தொடர்பான சர்ச்சைகளில் சிக்கி அதிலிருந்து மீண்டு வந்தவர். இவரது பந்து வீச்சு முறை ஐசிசி யின் விதிமுறைப்படி இல்லை எனக் கூறி 2009 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இவருக்கு அறிவுறுத்தி வந்தது .
அப்போது தனது பந்துவீச்சு ஸ்டைலை மாற்றிக் கொண்டு மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்தார் சயீத் அஜ்மல். ஆனாலும் 2014 ஆம் ஆண்டு ஐசிசி இவரது பவுலிங் ஆக்சன் விதிமுறைகளின் படி இல்லை என்று கூறி மீண்டும் தடை செய்தது . தனது பந்துவீச்சு முறையை மாற்றுவதற்காக கால அவகாசம் எடுத்துக்கொண்ட சயீது அஜ்மல் தன்னால் முழுவதுமாக மாற்ற முடியவில்லை எனக்கூறி 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை காண பாகிஸ்தான் அணியில் இருந்து விலகினார்.
Trending
இதுவரை 113 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர் 184 விக்கெட்டுகளையும், 35 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 178 விக்கெட்டுகளையும், 64 டி20 போட்டிகளில் விளையாடி 85 விக்கெட் களையும் வீழ்த்தி இருக்கிறார் . மொத்தமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 448 விக்கெட்டுகளை குறைந்த கால இடைவேளையில் வீழ்த்தி உலகின் தலைசிறந்த சுழற் பந்துவீச்சாளர்களில் ஒருவராக விளங்கினார் .
தற்போது இவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது பிசிசிஐ போன்ற வலிமையான கிரிக்கெட் வாரியத்திற்காக தான் விளையாடியிருந்தால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 1000 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பேன் என்று தெரிவித்திருக்கிறார் . தான் தடை செய்யப்பட்ட காலங்களில் தனக்கு சரியான ஆதரவு கிடைக்கவில்லை என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இது குறித்து பேசிய சயீத் அஜ்மல், “இந்திய அணிக்காக நான் விளையாடு இருந்தால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆயிரம் விக்கெட்களை வீழ்த்தி இருப்பேன் . இதை நான் நேர்மையாக சொல்கிறேன் . நான் கிரிக்கெட் விளையாடிய காலகட்டங்களில் ஒரு வருடத்திற்கு 100 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி இருக்கிறேன் . இது ஒரு ஆண்டு மட்டுமல்லாமல் விளையாடிய அத்தனை ஆண்டுகளிலும் வருடத்திற்கு சராசரியாக நூறு விக்கெட்டுகளை எடுத்திருக்கிறேன்.
2012 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டுக்கான காலகட்டத்தில் 326 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறேன் . எனக்கு அடுத்தபடியாக இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 186 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார் . இருவருக்கும் இடையேயான வித்தியாசத்தை பாருங்கள் 140 விக்கெட்டுகளுக்கு மேல் வித்தியாசம் இருக்கிறது.
2009 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் என்னை தடை செய்திருக்கும் ஆனால் எப்படியோ விளையாட அனுமதித்தார்கள் . நான் 448 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியதும் இதற்கு மேல் இவனை விட்டு வைக்கக் கூடாது என்று தடை செய்து விட்டார்கள் . அவர்கள் என்னை தடை செய்த போது நான் உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக இருந்தேன்” என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now