
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சுவாரஸ்யமாக நடந்து வருகிறது. நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்த்த சூழலில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 91 ரன்களுக்கும் ஆல் அவுட்டானது. இதனால் போட்டி 3வது நாளிலேயே முடிவு பெற்றது.
இதனையடுத்து 2ஆவது டெஸ்டிலாவது பதிலடி தர வேண்டும் என ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் புதிவித திட்டத்தை போட்டார். அதாவது நாக்பூர் மைதானத்தில் 3 நாட்களிலேயே போட்டி முடிந்ததால் அந்த பிட்ச்-ஐ அடுத்த 2 நாட்களுக்கு பயிற்சிகாக கொடுக்குமாறு விதர்பா மைதான நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தார். இதே போன்ற பிட்ச் தான் மற்ற டெஸ்ட்களிலும் இருக்கும் என்பதால் இங்கு பேட்டிங் பயிற்சி கொடுக்க விரும்பினார்.
எப்படியும் பிட்ச்-ஐ கொடுப்பார்கள் என்று நம்பி ஓட்டல் அறைக்கு சென்றுவிட்டு வந்து பார்த்த போது, பிட்ச் முழுவதும் தண்ணீரை விட்டு ஊழியர்கள் மாற்றி அமைத்தனர். ஒரு டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு பிட்ச்-ல் தண்ணீர் விட்டு தன்மையை மாற்றுவது சகஜம் தான். ஆனால் ஒருவர் கோரிக்கை வைத்த பின்னரும் ஏன் அவசர அவசரமாக பிட்ச்-ஐ மாற்றினர் என ஆஸ்திரேலிய வீரர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.