ஐசிசி உலகக்கோப்பை 2023: நெதர்லாந்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்த ஆஃப்கானிஸ்தான்!
நெதர்லாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது.
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இன்றைய போட்டிக்கான இரு அணிகளிலும் தலா ஒரு மாற்றங்களை செய்துள்ளன.
இதையடுத்து அந்த அணியின் தொடக்க வீரர்களாக மேக்ஸ் ஓடவுட் - வெஸ்லி பரேசி இணை களமிறங்கினர். இதில் பரேசி ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் ஓடவுட்டுடன் இணைந்த காலின் அக்கர்மேன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Trending
இதில் அதிரடியாக விளையாடி வந்த மேக்ஸ் ஓடவுட் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 42 ரன்களைச் சேர்த்து ரன் முறையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து காலின் அக்கர்மேன் 29 ரன்களுக்கு, கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து ரன் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் களமிறங்கிய பாஸ் டி லீட் 3, சகிப் சுல்ஃபிகர் 3, லோகன் வான் பீக் 2 ரன்கள் என அடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதேசமயம் நான்காவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஏங்கல்பிரெக்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின் 58 ரன்கள் எடுத்த நிலையில் ஏங்கல்பிரெக்ட்டும் ரன் அவுட்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் பெரிதளவி ரன்களைச் சேர்க்கவில்லை.
இதனால் நெதர்லாந்து 46.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது நபி 3 விக்கெட்டுகளையும், நூர் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - நஜிபுல்லா ஸத்ரான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் 10 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 20 ரன்களில் நஜிபுல்லா ஸத்ரானும் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் இணைந்த ரஹ்மத் ஷா - கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்திருந்த ரஹ்மத் ஷா 8 பவுண்டரிகளுடன் 52 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
அதேசமயம் மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 56 ரன்களைச் சேர்த்தார். அவருடன் இணைந்து விளையாடிய அஸ்மதுல்லா ஒமர்ஸாயும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 31 ரன்களைச் சேர்த்ததுடன் அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார்.
இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 31.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி நடப்பு சீசனில் தங்களது நான்காவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் 8 புள்ளிகளைப் பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி புள்ளிப்பட்டியளில் 5ஆம் இடத்திற்கு முன்னேரி அரையிறுதி வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now