
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 33ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் குசால் மெண்டிஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முதல் பந்தில் பவுண்டரி அடித்த ரோஹித் சர்மா அடுத்த பந்திலேயே க்ளீன் போல்டாகி ஏமாற்றமளித்தார். இதையடுத்து ஷுப்மன் கில்லுடன் இணைந்த நட்சத்திர வீரர் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அணிக்கு அஸ்திவாரத்தை அமைத்துக்கொடுத்தனர். அதன்பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷுப்மன் கில் 11 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 92 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 11 பவுண்டரிகளுடன் 88 ரன்களைச் சேர்த்திருந்த விராட் கோலியும் மதுஷங்கா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.