
வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றியது. இதில் அஸ்வின், ஸ்ரேயாஸ் ஐயர் , ரிஷப் பந்த் உள்ளிட்ட வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இதன் காரணமாக ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
இரண்டாவது டெஸ்டில் அஸ்வின் ஆறு விக்கெட்டுகள் மற்றும் 42 ரன்கள் சேர்த்து 145 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக இந்தியா எட்ட உதவினார். இதன் மூலம் அஸ்வின் பந்துவீச்சாளர்களுக்கான டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஒரு இடம் முன்னேறி நான்காவது இடத்தை சக வீரரான பும்ராவுடன் பகிர்ந்து கொண்டு உள்ளார்.
டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் முதலிடத்தில் பாட் கம்மின்ஸ் , இரண்டாவது இடத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன் ,மூன்றாவது இடத்தில் ரபாடாவும் உள்ளனர். ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் அஸ்வின் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். டெஸ்ட் போட்டியில் இடம் பெறாத ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.