
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அண்மையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2-1 என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து தற்போது உலக கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டிகளில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டியில் ஓய்வில் இருந்த ரோஹித் சர்மா மூன்றாவது போட்டியின் போது மீண்டும் அணிக்கு திரும்பி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த அந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் 353 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்கினை எதிர்த்து விளையாடும்போது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதன்படி 57 பந்துகளை சந்தித்து ஐந்து பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் என 81 ரன்கள் குவித்து அசத்தினார். அவர் அடித்த இந்த ஆறு சிக்ஸர்கள் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 551 சிக்ஸர்களை பறக்கவிட்டு கிரிஸ் கெயில் (553) அடுத்து அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற வரலாற்று சாதனையையும் நிகழ்த்தி இருந்தார்.