
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது சீசன் ஐஎல்டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 22ஆவது லீக் ஆட்டத்தில் எம்ஐ எமிரேட்ஸ் மற்றும் டெஸர்ட் வைப்பர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வைப்பர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய எமிரேட்ஸ் அணிக்கு ஆண்ட்ரே ஃபிளெட்சர் மற்றும் முகமது வசீம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபிளெட்சர் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய நிலையில், மற்றொரு தொடருக்க வீரரான முகமது வசீம் 19 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஃபிளெட்சருடன் இணைந்த டாம் பான்டன் அபாரமாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய இருவரும் தங்கள் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன் இரண்டாவது விக்கெட்டிற்கு 198 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.
இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டாம் பான்டன் தனது சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். அதன்பின் 9 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 105 ரன்களைச் சேர்த்த நிலையில் பான்டன் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆண்ட்ரே ஃபிளெட்சர் 10 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 96 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 228 ரன்களைக் குவித்தது. வைப்பர்ஸ் அணியில் முகமது அமீர் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.