ஷுப்மன் கில்லுடன் களமிறங்குவது யார்? - ஹர்திக் பாண்டியா பதில்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் யார் என்பது குறித்து கேப்டன் ஹர்திக் பாண்டியா விளக்கமளித்துள்ளார்.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் இந்திய சுற்றுப்பயணத்தில் தற்போது நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கோப்பை தொடரை முடித்துள்ளது. இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றி நான்காவது முறையாக பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை தன்வசப்படுத்தி சாதனைப் படைத்தது.
அதேசமயத்தில் ஆஸ்திரேலியா அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற காரணத்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இன்னொரு புறத்தில் நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்த இலங்கை அணி முதல் டெஸ்ட் போட்டியில் தோற்றதால் இந்திய அணியும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
Trending
ஜூன் மாதம் ஏழாம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் இந்த இரு அணிகளும் மோத இருக்கின்றன. இந்நிலையில் ஆஸ்திரேலிய இந்திய சுற்றுப்பயணத்தின் அடுத்த தொடராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் துவங்க இருக்கிறது.
இந்த முதல் போட்டியை குடும்ப நிகழ்ச்சி காரணமாக கேப்டன் ரோகித் சர்மா தவறவிடுகிறார். எனவே சமீபத்தில் இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணிக்கு துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கேப்டனாக வழிநடத்த இருக்கிறார். நாளை ரோஹித் சர்மா இடம்பெறாத சூழலில் ஷுப்மன் கில் உடன் யார் தொடக்க வீரராக களமிறங்குவார்கள் என்ற கேள்விக்கு ஹர்திக் பாண்டியா பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “நாளைய போட்டியில் ஷுப்மன் கில் உடன் இஷான் கிஷான் தொடக்க வீரராக களம் இறங்குவார். ஸ்ரேயாஷ் விஷயத்தில் வெளிப்படையாக காலக்கெடு எதுவும் இல்லை. ஆனால் நாம் சிறந்த ஒரு மாற்றை தற்பொழுது எதிர்பார்க்க வேண்டும். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம். இது மீண்டும் ஒரு பிரச்சனையாக அணிக்குள் தாக்கத்தை ஏற்படுத்துமா என்றால் வெளிப்படையாக கிடையாது. நானும் இப்படியான சூழ்நிலையில் இருந்திருக்கிறேன்.
அவர் வெளிப்படையாக நம் அருகில் இல்லை என்றால் நாம் மெதுவாக நகர்ந்து அதற்கான தீர்வை தேட வேண்டும். அதே சமயத்தில் அவர் அணிக்கு பக்கத்தில் இருந்தால் அவர் வரவேற்கப்படுவார். ஒருவேளை அவர் கிடைப்பது சிரமம் என்றால் அது குறித்து சிந்திக்க நமக்கு நிறைய நேரம் இருக்கிறது. எங்களிடம் உள்ள பந்துவீச்சு குழு தங்களது வேலையை சிறப்பாக செய்வதாகவே நான் நினைக்கிறேன். பும்ரா சில காலமாகவே தொடர்ந்து இல்லாமல் இருந்து வருகிறார். எங்களது பந்துவீச்சாளர் குழுவை நாங்கள் ஆதரிக்கிறோம்.
அவர்கள் விளையாடிய போட்டிகளின் அளவை வைத்து பார்த்தால் அவர்கள் தற்பொழுது அனுபவசாலிகள். பும்ரா இல்லாததால் எவ்வளவு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறார் என்பது உண்மை. அவர் இருந்தால் அணிக்கு என்னென்ன கொண்டு வருவார் என்பதும் தெரியும். ஆனால் இது குறித்து நாங்கள் அதிகம் கவலைப்படவில்லை. ஏனென்றால் அவரது இடத்தில் செயல்படக்கூடியவர்கள் நல்ல நம்பிக்கையாகவே இருக்கிறார்கள். இது எங்களுக்கு நல்ல நம்பிக்கையை அணிக்குள் ஏற்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now