களத்தில் பொறுமையாக இருப்பது தன்னால் வருவதில்லை - சட்டேஷ்வர் புஜாரா!
என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கியமான இன்னிங்ஸ் என்று கேட்டால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2017 ஆம் ஆண்டு பெங்களூரில் 97 ரன்கள் அடித்ததும் என இந்திய வீரர் சட்டேஷ்வர் புஜாரா தெரிவித்துள்ளார்.
கடந்த 13 ஆண்டுகளில் இந்திய டெஸ்ட் அணியை நீங்கள் தேர்வு செய்தால் முதலில் உங்களுடைய மனதுக்கு வரும் பெயர் புஜாராவாக தான் இருக்கும். டிராவிட், லட்சுமனுக்கு பிறகு டெஸ்ட் போட்டியை மட்டும் விளையாடும் வீரராக புஜாரா திகழ்ந்தார். எப்போதெல்லாம் இந்திய அணி சிரமத்தில் சிக்குகிறதோ அப்போதெல்லாம் களத்தில் இறங்கி இந்திய அணியை காப்பாற்றும் நட்சத்திரமாக புஜாரா திகழ்கிறார்.
இந்திய அணி இன்னிங்ஸில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலும் ஒரு மெக்கானிக் போல் களம் இறங்கி அதனை சரி செய்வதே இவருடைய பணி. இந்த நிலையில் 35 வயதான புஜாரா நாளை தன்னுடைய 100ஆவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார்.
Trending
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய புஜாரா, “அஸ்வின் என்னை பிடிவாதக்காரர் என்று கூறியிருந்தார். ஆனால் என்னை பொறுத்தவரை நான் என்னுடைய விளையாட்டு முறை மற்றும் பழக்கவழக்கங்களில் கண்டிப்பாக இருக்கிறேன். நான் யோகா மற்றும் என் உடல் தகுதியை பேணி காக்க பயிற்சிகளை எடுத்து வருகின்றேன். சமூக வலைத்தளத்தை நான் பயன்படுத்துவது இல்லை. தொலைக்காட்சிகளில் என்னை பற்றி நல்லவிதமாக பேசினால் கூட நான் அதனை பார்ப்பதில்லை.
கிரிக்கெட்டில் கவனம் செலுத்த இவ்வளவு விஷயங்களை நான் செய்து வருகின்றேன். களத்தில் பொறுமையாக இருப்பது தன்னால் வருவதில்லை. அதற்கு நம்மை சிறப்பான முறையில் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். பொறுமையாக இருக்க மன பலம் தேவை. நான் ஜூனியர் கிரிக்கெட், பல வயது பிரிவுகள் கிரிக்கெட் மற்றும் சர்வதேச கிரிக்கெட் என தொடர்ந்து விளையாடி வருகிறேன். இதற்கு கடின உழைப்பு தேவை. நாம் நமது விளையாட்டில் கவனம் செலுத்தினால் நிச்சயமாக வெற்றி பெற முடியும்.
நான் விளையாடியதில் எனக்கு மிகவும் பிடித்த இன்னிங்ஸ் எது என்று கேட்டால் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 72 ரன்கள் அடித்தது தான். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கியமான இன்னிங்ஸ் என்று கேட்டால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2017 ஆம் ஆண்டு பெங்களூரில் 97 ரன்கள் அடித்ததும் , தென் ஆப்பிரிக்கா மண்ணில் நான் வெளிநாட்டில் முதல் சதத்தை பூர்த்தி செய்ததும் தான்.
அதன் பிறகு அடிலெய்ட் மற்றும் பிரிஸ்பேனில் விளையாடிய ஆட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும். கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் எனது பெயரை வேண்டுமென்றே தான் நான் கொடுக்கவில்லை. நான் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி பயிற்சி செய்ய விரும்பினேன். இதுவரை நான் எதிர்கொண்டதில்லை மிகவும் சவாலான அணி என்றால் அது ஆஸ்திரேலியா தான். அதன் பிறகு இங்கிலாந்தும் சவால்களை கொடுக்கக் கூடியவர்கள் தான்.
இவ்விரண்டு அணிகளுக்கும் எதிராக நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறோம் என நினைக்கிறேன். இங்கிலாந்தின் ஆண்டர்சன் தென்னாப்பிரிக்காவின் மார்க்கல் டெல் ஸ்டெயின் மற்றும் ஆஸ்திரேலியாவில் பேட் கம்மிண்ஸ் ஆகியோர் நான் எதிர்கொண்டதில் சிறந்த வேகபந்துவீச்சாளர்கள் என நினைக்கிறேன். நூறாவது டெஸ்டில் விளையாடுவது மகிழ்ச்சி தான். ஆனால் அதனை விட இந்தியா வெற்றி பெற வேண்டும். அதற்காகவே நான் கவனம் செலுத்தி வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now