
இந்திய அணி இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடிவருகிறது. இதைத்தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியில் ராகுல், கில், புஜாரா, கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அஷ்வின், அக்ஸர் படேல், ஜடேஜா ஆகிய வழக்கமான வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். விபத்தில் காயமடைந்த ரிஷப் பந்த் விளையாட முடியாததால், கேஎஸ் பரத் முதன்மை விக்கெட் கீப்பராகவும், 2ஆவது விக்கெட் கீப்பராக இஷான் கிஷனும் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர்.
டெஸ்ட் அணி தேர்வு முதல் தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி தொடரில் வீரர்கள் விளையாடுவதன் அடிப்படையில் அமையவேண்டும். அப்படி பார்க்கப்போனால் ரஞ்சி தொடரில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி இரட்டை சதம், முச்சதம் என பெரிய ஸ்கோர்களை அடித்து மலை மலையாக ரன்களை குவித்துவரும் சர்ஃபராஸ் கான் இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சர்ஃபராஸ் கான் எடுக்கப்படவில்லை.