
இலங்கை கிரிக்கெட் அணியின் இந்திய பயணம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதில் டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இலங்கை அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கவுகாத்தி மற்றும் கொல்கத்தாவில் நடந்த முதல் இரு ஆட்டங்களில் தோல்வியை தழுவிய இலங்கை அணி ஒரு நாள் தொடரையும் பறிகொடுத்து விட்டது.
இந்த நிலையில் இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று பகல்-இரவு மோதலாக நடக்கிறது. கௌகாத்தியில் நடந்த முதல் ஆட்டத்தில் விராட் கோலியின் சதத்தோடு 373 ரன் குவித்து மிரட்டிய இந்தியா 2ஆவது ஆட்டத்தில் 216 இலக்கை தடுமாறித் தான் எட்டிப்பிடித்தது. மிடில் வரிசையில் லோகேஷ் ராகுல் (64 ரன்) பொறுப்புடன் விளையாடி அணியை கரைசேர்த்தார்.
தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வெல்லும் உத்வேகத்துடன் உள்ள இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்று தெரிகிறது. பந்து வீச்சாளர்களில் முகமது ஷமி, அக்ஸர் பட்டேலுக்கு ஓய்வு அளித்து விட்டு அர்ஷ்தீப்சிங், வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம். இன்னும் 3 நாட்களில் நியூசிலாந்துக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தொடங்க இருக்கிறது. அந்த தொடருக்கு வெற்றியோடு நுழைய இந்தியா ஆர்வமாக உள்ளது.