
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒரு நாள் போட்டி தற்போது மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா புத்திச்சாலித்தனமாக பந்து வீச்சு தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட்டை 5 ரன்களுக்கு 2ஆவது ஓவரிலேயே வீழ்த்தினார் முகமது சிராஜ். அதன்பின்னர் மிட்செல் மார்ஷும் ஸ்டீவ் ஸ்மித்தும் இணைந்து சிறப்பாக பேட்டிங் ஆடினர். ஸ்மித் 22 ரன்களுக்கு ஹர்திக் பாண்டியாவின் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து சதத்தை நோக்கி ஆடிய மிட்செல் மார்ஷ் 81 ரன்களுக்கு ஜடேஜாவின் சுழலில் வீழ்ந்தார்.
அதன்பின் லபுஷாக்னே 15 ரன்களில் குல்தீப் யாதவின் பவுலிங்கில் ஆட்டமிழக்க, அதன் பின்னர் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் ஆர்டர் மளமளவென சீட்டுக்கட்டாய் சரிந்தது. ஜோஷ் இங்லிஸ்(26), கேமரூன் க்ரீன்(12), ஸ்டோய்னிஸ்(5) ஆகிய மூவரும் ஷமியின் பவுலிங்கில் ஆட்டமிழந்தனர். மேக்ஸ்வெல் 8 ரன்னுக்கு ஜடேஜாவின் பந்தில் ஆட்டமிழக்க, சீன் அபாட்(0) மற்றும் ஆடம் ஸாம்பா(0) ஆகிய இருவரும் டக் அவுட்டாக, 35.4 ஓவரில் 188 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஆஸ்திரேலிய அணி.