
இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றியது. இதற்கடுத்து மும்பையில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதற்கு அடுத்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில், ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.
இந்த நிலையில், தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்மித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேமரூன் கிரீன், மேக்ஸ்வெல் ஆகியோர் வெளியில் அமர வைக்கப்பட்டு டேவிட் வார்னர் மற்றும் ஆஸ்டன் அகர் இருவரும் உள்ளே கொண்டுவரப்பட்டார்கள். இந்திய அணி தரப்பில் குல்திப் யாதவ் அணிக்குள் வர கொண்டுவரப்பட்டார்.
டேவிட் வார்னர் அணிக்குள் வந்தாலும் கடந்த ஆட்டங்களைப் போல டிராவீஸ் ஹெட் மற்றும் மிட்சல் மார்ஷ் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள். கடந்த ஆட்டங்களைப் போலவே இருவரும் அதிரடியில் ஈடுபட அவர்களின் ஆஸ்திரேலியா அணி விக்கெட்டை இழக்காமல் 50 ரன்கள் தாண்டி வெற்றிகரமாக பயணித்தது.