
உலகக் கோப்பை தொடருக்கு முன்பு இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இத்தொடரின் முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று ராஜ்கோட்டில் நடைபெற்றது. இப்போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி ஆஸ்திரேலிய அணியை ஒயிட்வாஷ் செய்யும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்திருந்தது. இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஷ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளர்கள் ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோரது ஓவர்களில் பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசித்தள்ளினர்.