
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் நல்ல ஸ்கோரை எட்டிய போதும், இந்திய பவுலர்களின் இறுதிகட்ட போராட்டத்தினால் 188 ரன்களுக்கெல்லாம் அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
ஆஸ்திரேலியாவின் ஓப்பனிங் வீரர் மிட்செல் மார்ஷ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்து வந்தனர். ஒருபுறம் மார்ஷ் 65 பந்துகளில் 81 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 22 ரன்களையும் எடுத்து நன்கு செட்டிலாகி இருந்தனர். இதனால் 129/3 என்ற வலுவான நிலையில் அந்த அணி இருந்தது. எனினும் இந்திய பவுலர்கள் முகமது ஷமி மற்றும் சிராஜ் ஆகியோரின் போராட்டத்தால் 188 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் சாய்த்துவிட்டனர்.
மிக குறைந்த இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. இஷான் கிஷான் 3, சுப்மன் கில் 20, விராட் கோலி 4, சூர்யகுமார் 0 என அடுத்தடுத்து அவுட்டாகினர். கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவோ 25 ரன்களுக்கு நடையை கட்டினார். இதனால் 83 ரன்களுக்கெல்லாம் 5 விக்கெட்களை இழந்து திணறியது. அப்போது பொறுப்புடன் விளையாடி கேஎல் ராகுல் (75), ரவீந்திர ஜடேஜா (45) ஜோடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இந்தியாவுக்கு வெற்றியை தேடி தந்தனர்.