
இந்தியா - ஆஸ்திரேலியா அணிக்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு சிக்சர் மற்றும் பவுண்டரிகளாக விளாசிய மிச்சல் மார்ஷ் வெறும் 65 பந்துகளில் 81 ரன்கள் அடித்தார். இதில் 5 சிக்சர்கள் 10 பவுண்டரிகள் அடங்கும்.
அடுத்த அதிகபட்சமாக ஸ்மித் 22 ரன்கள், இங்கிலிஷ் 26 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகினர். இதனால் முழுமையாக 50 ஓவர்கள் கூட ஆஸ்திரேலியா அணியால் பிடிக்க முடியவில்லை. ஒருகட்டத்தில் 128 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த ஆஸ்திரேலியா, 35.4 ஓவர்களில் 188 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது. சிராஜ் மற்றும் முகமது சமி இருவரும் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
எளிய இலக்காக தெரிந்த இந்த ஸ்கொரை துரத்திய இந்திய அணிக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரிசையாக சொற்பரன்களுக்கு அவுட்டாக, 39 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்து தடுமாற்றம் கண்டது. அடுத்துவந்த ஹர்திக் பாண்டியா 5வது விக்கெட்டுக்கு கேஎல் ராகுலுடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் 44 ரன்கள் சேர்த்தனர். ஹர்திக் பாண்டியா 25 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்துவந்த ஜடேஜா நம்பிக்கையளிக்கும் விதமாக கேஎல் ராகுலுடன் ஜோடி சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தார்.