
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வந்தது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்று அசத்தியது. ஆனால் அதன்பின் நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகளை பதிவுசெய்து அசத்தியதுடன், 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் ஸாக் கிரௌலியைத் தவிர மற்ற எந்த வீரரும் பெரிதளவில் சோபிக்க தவறியதால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 212 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது.
இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் ஆகியோர் அடுத்தடுத்து சதங்களைப் பதிவுசெய்து அசத்தினர். அதன்பின் 103 ரன்களில் ரோஹித் சர்மாவு, 110 ரன்களில் ஷுப்மன் கில்லும் தங்களது விக்கெட்டை இழந்தனர்.