
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்தப்போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. மேலும் இப்போட்டியில் 112 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் கைப்பற்றிய ரவீந்திர ஜடேஜாஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது மிகப்பெரிய வெற்றியை இப்போட்டியில் இந்திய அணி பதிவு செய்துள்ளது. முன்னதாக 2021ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே மிகப்பெரிய வெற்றியாக இருந்தது. அதனைத் தற்போது 434 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை இந்திய அணி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த வெற்றி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, “நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும்போது, அது 2-3 நாட்களில் முடிவதை விரும்புவதில்லை. அதேசமயம் 5 நாட்களுக்கு மேல் விளையாடுவதன் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இப்போட்டியில் இங்கிலாந்து அணியினர் சிறப்பாகவே விளையாடினார்கள். அவர்களது ஆட்டம் எங்களுக்கு அழுத்தங்களை ஏற்படுத்தியது.