
இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி, செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள் அனைவரும் நிச்சயமாக உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட வேண்டும் என இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வலியுறுத்தியதன் காரணமாக, ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், ரிஷப் பாந்த், குல்தீப் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சார்ஃப்ராஸ் கான் முக்கிய வீரர்கள் அனைவரும் விளையாடினர்.
இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்த அணியில் இந்திய அணிக்கு மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள ரிஷப் பந்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேசமயம் அறிமுக வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாளிற்கும் இப்போட்டியில் விளையாடும் வாய்ப்பானது வழங்கப்பட்டுள்ளது.