
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தங்களது உலககோப்பை கணக்கை வெற்றியுடன் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 199 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி துவக்கத்தில் 2 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் இணைந்து 165 ரன்கள் சேர்த்தனர்.
இதன் காரணமாக இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 85 ரன்களில் ஆட்டம் இழந்தார். இவருடன் இணைந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் 97 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தார். அவர் இந்த போட்டியின் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். நேற்றைய போட்டியில் மட்டும் விராட் கோலி ஐந்து சாதனைகள் படைத்திருக்கிறார்.
நேற்றைய போட்டியில் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் 12 வருட சாதனையையும் முறியடித்திருக்கிறார். ஐசிசி வெள்ளை பந்து வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரராக சச்சின் டெண்டுல்கர் இருந்தார். அந்த சாதனையை விராட் கோலி முறியடித்து இருக்கிறார். இந்தியாவில் லெஜெண்ட் சச்சின் டெண்டுல்கர் 61 போட்டிகளில் விளையாடி 2719 ரன்கள் எடுத்திருந்தார்.