
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் இறுதி போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்த இந்தியா 2013க்குப்பின் தொடர்ந்து 10ஆவது வருடமாக ஐசிசி தொடரில் தோற்று வெறும் கையுடன் நாடு திரும்பியது. குறிப்பாக ஜாம்பவான்களாக போற்றப்படும் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, புஜாரா ஆகியோர் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சுமாராக செயல்பட்டது தோல்வியை கொடுத்ததால் அவர்களை கழற்றி விட்டு புதிய வீரர்களை சேர்க்குமாறு ரசிகர்கள் கொந்தளித்தனர்.
இந்நிலையில் அந்த தோல்விக்கு பின் நாடு திரும்பியுள்ள இந்தியா அடுத்ததாக வரும் ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகளில் விளையாட உள்ளது. 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடரில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்பட்டது.
இந்நிலையில் ஜூலை 12ஆம் தேதி தொடங்கும் அந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ தேர்வுக்குழு அறிவித்துள்ளது. குறிப்பாக வரும் டிசம்பர் மாதம் வரை வேறு எந்த டெஸ்ட் தொடர்களும் இல்லாததால் தற்போதைக்கு ரோஹித் சர்மா கேப்டனாக தொடர்வார் என்று வெளியான செய்திகள் உண்மையாகியுள்ளது. ஏனெனில் ரோஹித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அந்த அணியில் ஷுப்மன் கில், விராட் கோலி, போராடி கம்பேக் கொடுத்து ஃபைனலில் அசத்திய அஜிங்கிய ரகானே துணை கேப்டனாகவும் தேர்வாகியுள்ளனர்.