
ஐசிசியின் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் எதிர்வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. மேலும் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதையடுத்து இத்தொடரில் பங்கேற்கும் அணிகளை அந்தந்த கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேசமயம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தற்போதுவரை அறிவிக்கபடவில்லை. மேற்கொண்டு இவ்விரு அணிகளும் இந்த வார இறுதியில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இத்தொடருக்கான தொடக்க நிகழ்ச்சியை பிப்ரவரி 16 மற்றும் 17ஆம் தேதிகளில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. மேலும் ஐசிசி நிகழ்வுகளில் வழக்கமான நடைமுறையான தொடக்க விழாவில் அனைத்து அணி கேப்டன்களும் பங்கேற்க உள்ளனர்.