
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அமைக்கப்பட்டுள்ள ஆடுகளம் சர்ச்சையில் சிக்கி உள்ளது. பேட்டிங்கிறதுக்கு சாதகமாக ஆடுகளம் இருக்கும் என கணிக்கப்பட்டது. இதனால் டாஸ் வென்ற ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 109 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணி விளையாடிய போது ஆடுகளம் கொஞ்சம் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறியது.
இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேரம் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் 47 ரன்கள் ஆஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில் ஆடுகளம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், “ஆடுகளம் மிகவும் சவாலாக இருந்தது உண்மைதான். நாங்கள் நினைத்ததை விட பந்து நன்றாக திரும்பியது.
ஆடுகளத்தில் கொஞ்சம் ஈரப்பதம் இருந்திருக்கலாம். இதனால் தான் காலை வேளையில் பந்து நன்றாக திரும்பியது. நாங்கள் இன்னும் அதிக ரன்கள் எடுத்திருக்கலாம். எங்கள் பேட்ஸ்மேன்கள் தவறான ஷாட் ஆடி ஆட்டம் இழந்ததாக நான் நினைக்கவில்லை. ஏதேனும் ஒரு நாள் இப்படி சொதப்பலாம். எங்களுடைய பேட்ஸ்மேன்கள் இதுபோன்று சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் விளையாட விரும்புகிறார்கள். ஏனென்றால் இதுதான் எங்களுடைய பலம். கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிக்கு பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் மோசமானதாக இல்லை.