
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிகெட் தொடர் அடுத்த வாரம் முதல் தொடங்கவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன.
இத்தொடரில் பங்கேற்கும் அணிகளை இறுதி செய்ய இன்றே கடைசி நாள் என்ற கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான பணிகளில் அனைத்து அணிகளும் ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கும் இறுதி செய்யப்பட்ட இந்திய அணியை பிசிசிஐ நேற்றைய தினம் அறிவித்தது. இதில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் கடைசி போட்டியின் போது காயமடைந்த பும்ரா, அதன்பின் தற்போது வரை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்து வருகிறார். இருப்பினும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் இடம்பிடித்திருந்த நிலையில், திடிரென அத்தொடரில் இருந்தும் விலகினார். அப்போதே அவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடுவாரா என்ற கேள்விகள் அதிகரித்திருந்தன.