ஐபிஎல் 2023: ரஸா, ஷாருக் கான் அதிரடியில் பஞ்சாப் கிங்ஸ் த்ரில் வெற்றி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
ஐபிஎல் 16ஆவது சீசனின் 21ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கைல் மேயர்ஸ், கே.எல்.ராகுல், அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். கைல்ஸ் மேயர் 7வது ஓவரில் 29 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த தீபக் ஹூடா 2 ரன்களில் கிளம்பினார்.
குருணால் பாண்டியா 18 ரன்களிலும், நிகோலஸ் பூரான் ரன் எடுக்காமலும் பெவிலியன் திரும்ப கே.எல்.ராகுல் மறுபுறம் நின்று அதிரடி காட்டி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மார்கஸ் ஸ்டோனிஸ் 15 ரன்களில் அவுட்டானதும், 56 பந்துகளில் 74 ரன்களை குவித்த கே.எல்.ராகுலும் கிளம்பினார்.
Trending
பின்னர் வந்த கிருஷ்ணப்பா கௌதம், யுத்வீர் சிங் வரிசையாக விக்கெட்டாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் லக்னோ அணி 8 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை மட்டுமே சேர்த்தது. பஞ்சாப் அணி தரப்பில் சாம் கரன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், ரபாடா 2 விக்கெட்டையும், அர்ஷ்தீப் சிங், சிங்கந்தர் ராசா, ஹர்ப்ரீத் பரார் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அறிம்முக வீரர் அதர்வா டைட், லக்னோ அணியின் அறிமுக வேகப்பந்து வீச்ச்சாளர் யுத்விர் சிங் பந்துவீச்சில் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து பிரப்சிம்ரான் சிங்கும் 4 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த மேத்யூ ஷார்ட் - ஹர்ப்ரீட் சிங் பாட்டியா இணை பொறுப்பான் ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடி வந்த மேத்யூ ஷார்ட் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதைத்தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹர்ப்ரீட் சிங் பாட்டியா 22 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய சாம் கரண், ஜித்தேஷ் சர்மா ஆகியோர் சொற்ப ரன்களுக்கும் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் 5ஆம் நிலை வீரராக களமிறங்கிய சிக்கந்தர் ரஸா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது முதல் ஐபிஎல் அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரில் அரைசதம் கடந்த முதல் ஜிம்பாப்வே வீரர் எனும் சாதனையையும் படைத்தார்.
இதற்கிடையில் களமிறங்கிய தமிழக வீரர் ஷாருக் கான் முதல் பந்திலேயே சிக்சரை பறக்கவிட்டு தனது ஆட்டத்தை தொடர்ந்தார். ஆனால மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த சிக்கந்தர் ரஸா 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 57 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் பஞ்சாப் அணி வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 20 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
ஆனால் கடைசி வரை களத்தில் இருந்த ஷாருக் கான் 2 சிக்சர், ஒரு பவுண்டரி 22 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 2 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
Win Big, Make Your Cricket Tales Now