டாஸை விட போட்டியை வெல்வதே முக்கியம் என நினைக்கிறேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
சூழ்நிலை எதுவாக இருந்தாலும் எங்கள் அணி வீரர்களுக்கு அவர்களுக்கான சுதந்திரத்தை கொடுக்க விரும்புகிறோம் என கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 235 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சுனில் நரைன் 81 ரன்களையும், பில் சால்ட், அங்கிரிஷ் ரகுவன்ஷி ஆகியோர் தலா 32 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் மார்கஸ் ஸ்டொய்னிஸ் 36 ரன்களையும், கேப்டன் கேஎல் ராகுல் 25 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் அந்த அணி 16.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் கேகேஆர் அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
Trending
இப்போட்டியின் வெற்றிகுறித்து பேசிய கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், “ஓய்வரையில் கடந்த 6 மேட்ச்களில் சில விவாதங்கள் நடைபெற்றது. அதில், சக வீரர்கள் ஏன் தொடர்ச்சியாக நாம் டாஸை இழந்துவருகிறோம் என்று கேள்வி எழுப்பினர். ஆனால் என்னைப் பொறுத்தவரை போட்டியை வெல்வதே முக்கியம் என நினைக்கிறேன். இந்த போட்டியில் பவர்பிளே ஓவர்களில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம் என்று நினைக்கிறேன்.
டைம் அவுட்டின் போது சுனில் நரைன் எங்களிடம் 200 ரன்களைச் சேர்த்தால் அது வெற்றிக்கு உதவும் என்று கூறினார். மேலும் வலது - இடது வீரர்கள் ஒருங்கிணைந்து விளையாடுவது எதிரணிக்கு சவாலாக அமைவதுடன், பந்துவீச்சாளர்களும் தங்கள் திட்டங்களை செயல்படுத்த முடியாமல் தடுமாறுவார்கள் என எதிர்பார்த்தோம். அதற்கேற்றது போலவே அது மிகப்பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்தியது.
இப்போட்டியில் நாங்கள் அதிரடியாக விளையாட, வீரர்கள் அவர்களுக்கு எப்படி விளையாட வேண்டும் என்று எண்ணுகிறார்களோ அப்படி விளையாட அவர்களுக்கான சுதந்திரத்தை நாங்கள் கொடுத்தோம். சூழ்நிலை எதுவாக இருந்தாலும் அவர்களுக்கான சுதந்திரத்தை கொடுக்க விரும்புகிறோம். சில சமயங்களில் அது உங்களுக்கு பலனளிக்காது, சில சமயம் அது நீங்கள் நினைத்ததைப் போலவே நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now