ஐபிஎல் 2024: மீண்டும் மிரட்டிய நரைன்; லக்னோ அணிக்கு 236 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 236 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 54ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வழக்கம் போல் சுனில் நரைன் - பில் சால்ட் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இருவரும் தொடக்கம் முதலே அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாசித்தள்ள அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 61 ரன்களைச் சேர்த்த நிலையில் 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 32 ரன்கள் எடுத்திருந்த பில் சால்ட் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய அங்கிரிஷ் ரகுவன்ஷியும் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேசமயம் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த சுனில் நரைன் 25 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
Trending
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சுனில் நரைன் சதத்தை நெருங்கிய நிலையில் 6 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் என 81 ரன்களை குவித்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைதொடர்ந்து களமிறங்கிய அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸல் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 12 ரன்களோடு பெவிலியனுக்கு திரும்ப, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அங்கிரிஷ் ரகுனஷியும் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 32 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதனைத்தொடர்ந்து ரிங்கு சிங் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதில் 2 பவுண்டரிகளுடன் 16 ரன்களை எடுத்திருந்த ரிங்கு சிங் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் 3 பவுண்டரிகளுடன் 23 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை களத்தில் இருந்த ரமந்தீப் சிங் அதிரடியாக விளையாடி 6 பந்துகளில் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 25 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்களைச் சேர்த்தது. லக்னோ அணி தரப்பில் நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Win Big, Make Your Cricket Tales Now