
இந்தியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இத்தொடரில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பு சீசனில் விளையாடிய 8 போட்டிகளில் மூன்று வெற்றிகளை மட்டுமே பதிவுசெய்து புள்ளிப்பட்டியலின் எட்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனால் அந்த அணி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் அடையும் வகையில் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் காயம் காரணமாக சில போட்டிகளை தவறவிட்ட டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ், தற்போது தனது காயம் தீவிரமடைந்ததின் காரணமாக அவர் மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியா திரும்பினார்.
முன்னதாக ஏப்ரல் 03ஆம் தேதி நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது காயத்தை சந்தித்தார். இதனையடுத்து, அவர் அடுத்தடுத்த போட்டிகளை தவறவிட்டார். அதன்பின் மிட்செல் மார்ஷ் தனது மேல் சிகிச்சைக்காக தாயகம் திரும்பிய நிலையில், தற்போதுவரை அவர் காயத்திலிருந்து குணமடையாத காரணத்தால் நடப்பு ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளிலிருந்து அவர் விலகுவார் என தகவல் வெளியாகியுள்ளது.