
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 205 ரன்களைக் குவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 67 ரன்களையும், ரியான் பராக் 43 ரன்களையும், கேப்டன் சஞ்சு சாம்சன் 38 ரன்களையும் சேர்த்து அசத்தினர். பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய லோக்கி ஃபெர்குசன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில், நேஹால் வதேரா 62 ரன்களையும், கிளென் மேக்ச்வெல் 30 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.