
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடருக்கு முன்னதாக அனைத்து ஐபிஎல் அணிகளும் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலமானது நடைபெறவுள்ளது. அதன்படி இந்த ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலம் வருகிற நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சௌதி அரேபியாவின் ஜித்தா நகரில் நடைபெறும் என அண்மையில் அறிவிப்பு வெளியானது.
மேலும் இந்த ஏலத்தில் மொத்தமாக 1574 வீரர்கள் தங்கள் பெயரை பதிவுசெய்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிலிருந்து 574 வீரர்களின் பெயர்களை ஐபிஎல் நிர்வாகம் இறுதிசெய்துள்ளது. இதில் 366 இந்தியர்களும், 208 வெளிநாட்டு வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். மேலும் இந்த ஏலத்தில் சுமார் 81 வீரர்கள் அட்ரூ.2 கோடி பிரிவில் தங்கள் பெயர்களை பதிவுசெய்துள்ளனர். இதனால் இந்த ஏலத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் விடுவிக்கப்பட்டார். கடந்த 2018ஆம் ஆண்டு முதல் அந்த அணியின் மிக முக்கிய வீரராக இருந்துவந்த அவர் தற்சமயம் அந்த அணியில் இருந்து வெளியேறியுள்ளது பல்வேறு விமர்சனங்களுக்கும் வழிவகுத்தது. மேலும் ஏலத்திற்கு முன்னதாக அந்த அணி அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அபிஷேக் போரல் ஆகியோரை மட்டும் தக்கவைத்தது.