
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரை வெற்றியுடன் முடித்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் செயல்பாடுகள் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது. ஏனெனில் இத்தொடரில் விளையாடிய 14 போட்டிகளில் 4 வெற்றி மற்றும் 10 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் 9ஆம் இடத்தை பிடித்து தொடரை நிறைவு செய்துள்ளது. அதிலும் குறிப்பாக அந்த அணி இந்த சீசனில் 10 போட்டிகளில் சேஸிங் செய்து அதில் 8 முறை தோல்வியைத் தழுவியது. குறிப்பாக கடைசி ஓவர் வரை சென்றும் இலக்கை எட்ட முடியாததே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை.
மேற்கொண்டு அணியில் டாப் ஆர்டர் வீரர்களை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதும், பந்துவீச்சாளர்கள் ரன்களைக் கட்டுப்படுத்த தவறியதும், சஞ்சு சாம்சனின் காயம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை அந்த அணி சந்தித்திருந்தது. இருப்பினும் அணிக்கு ஆறுதலளிக்கும் விதமாக இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷில் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், அணியின் எதிர்காலம் எனும் அளவிற்கு தனது ஆட்டத்தை நிரூபித்துள்ளார்.