
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் 44ஆவது லீக் போட்டியில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து ஆசத்தியுள்ள நிலையில், கேகேஆர் அணி அதற்கான பதிலடியை இப்போட்டியில் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் அதிவேக பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் காயத்தில் இருந்து மீண்டும் அணியில் இணைந்துள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் உம்ரான் மாலிக்கை அவரது அடிப்படை தொகையான ரூ.75 லட்சத்திற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒப்பந்தம் செய்திருந்தது. இதனையடுத்து அவர் கேகேஆர் அணியுடன் இணைந்து பயிற்சிகளையும் தொடங்கி இருந்தார்.