
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலம் எதிவரும் நவம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் சௌதீ அரேபியாவின் ஜித்தாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஏலத்தில் மொத்தம் 1574 வீரர்கள் (1,165 இந்தியர்கள் மற்றும் 409 வெளிநாட்டினர்) தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர்.
இதில் இந்தியாவைச் சேர்ந்த 1,165 வீரர்களும், வெளிநாடுகளைச் சேர்ந்த 409 வீரர்களும் பங்கேற்கின்றனர். இதில் வெளிநாடுகளில் அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 91 வீரர்களும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 76 வீரர்களும் பங்கேற்கவுள்ள நிலையில், குறைந்த பட்சமாக ஐக்கிய அரபு அமீரகம், இத்தாலியைச் சேர்ந்த ஒரு வீரர் இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளனர். மேற்கொண்டு 320 சர்வதேச வீரர்களும், 1,224 ஆன்கேப்ட் வீரர்களும், 30 அசோஷியட் தேசத்தை சேர்ந்த வீரர்களும் பங்கேற்கின்றனர்.
இந்த மெகா ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளின் கேப்டனாக இருந்த ரிஷப் பந்த், கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தக்கவைக்கப்படவில்லை. மேலும் இந்த மூன்று வீரர்களும் ரூ.2 கோடியை தங்கள் அடிப்படை தொகையாக நிர்ணயித்துள்ளனர். இதில் லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுலை எந்த அணி எவ்வளவு தொகைக்கு ஏலத்தில் எடுக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.