ரிஷப் பந்த் , இஷான் கிஷானும் போட்டியில் உள்ளனர் - ராகுல் டிராவிட்!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பர் இடத்திற்கு ரிஷப் பந்த் மற்றும் இஷான் கிஷான் ஆகியோரும் போட்டியில் உள்ளதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தாண்டு ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. இதுவரை நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களில் 16 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில், நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 20 அணிகள் பங்கேற்கவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
மேலும் இத்தொடருக்கான போட்டி அட்டவணையும் ஐசிசி சமீபத்தில் அறிவித்தது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் தொடரை நடத்தும் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதுகின்றன. தொடரில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி ஜூன் 9ஆம் தேதி நியூ யார்க் நகரில் நடைபெற இருக்கிறது. அதேபோல் குரூப் ஏ பிரிவில் இந்திய அணியுடன் சேர்ந்து, பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா மற்றும் அயர்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன.
Trending
இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணி ஏறத்தாள உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் ஒருசில வீரர்களின் இடம் மட்டும் கேள்விக்குறியாகவே உள்ளது. அதிலும் விக்கெட் கீப்பருக்கான தேர்வு மிகப்பெரும் சவலாக மாறியுள்ளது. ஏனெனில் விக்கெட் கீப்பருக்கான தேர்வில் சஞ்சு சாம்சன், ஜித்தேஷ் சர்மா, கேஎல் ராகுல், இஷான் கிஷான் ஆகியோருடன் சேர்த்து காயத்திலிருந்து மீண்டுள்ள ரிஷப் பந்தும் இருப்பதால், தேர்வாளர்கள் பெரும் குழப்பத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் இந்தாண்டு ஐபிஎல் தொடரானது டி20 உலகக்கோப்பை தொடருக்கான வீரர்கள் தேர்வில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணியில் இஷான் கிஷான், ரிஷப் பந்த் ஆகியோரும் போட்டியில் உள்ளனர் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “தற்போது அணியில் நிறைய விக்கெட் கீப்பர்கள் உள்ளனர். ஆஃப்கானிஸ்தான் தொடரில் சஞ்சு சாம்சன் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோரை பரிசோதித்தோம். நீங்கள் கேஎல் ராகுல் குறித்து பேசுகிறீர்கள். ஆனால் இங்கே இஷான் கிஷான் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோரும் இருப்பதை மறந்துவிடக்கூடாது. இவர்கள் அனைவரும் எங்களது தேர்வில் உள்ளனர். இன்னும் சில மாதங்களில் எப்படி நிலைமை இருக்கிறதோ அதைப் பொறுத்து நாங்கள் சிறந்த வீரர்களை நாங்கள் தேர்வு செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஒருநாள் உலகக்கோப்பை, ஆஸ்திரேலிய தொடர் ஆகியவற்றில் இந்திய அணிக்காக தேர்வுசெய்யப்பட்ட இஷான் கிஷான், தொன் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கு முன்னதாக பணிச்சுமை காரணமாக தொடரிலிருந்து விலகினார். ஆனால் அவர் ஓய்வை காரணம் காட்டி கோளிக்கை விருந்துகளில் பங்கேற்றதாகவும், அதனால் அதிருப்தி அடைந்த பிசிசிஐ அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து ஆஃப்கானிஸ்தான் தொடரிலிருந்து அவரை அணியிலிருந்து நீக்கியதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now