
இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த ஆஸ்திரேலிய அணியானது, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணி டெஸ்ட் தொடரில் பெற்ற வெற்றிக்கு ஒருநாள் தொடரில் பழி தீர்த்துள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தாலும் அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக ஆஸ்திரேலியா அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான மிட்சல் மார்ஷ் திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல. ஏனெனில் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது போட்டியில் 81 ரன்கள் குவித்த மார்ஷ் இரண்டாவது போட்டியில் ஆட்டமிழக்காமல் 66 ரன்கள் குவித்து அந்த அணியை வெற்றியை அழைத்துச் சென்றார்.
அதோடு நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் தொடக்க வீரராக களமிறங்கி 47 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 47 ரன்கள் குவித்து அந்த அணியின் ரன் குவிப்பிற்கு உதவியிருந்தார். இப்படி இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் அரைசதமும், மூன்றாவது ஆட்டத்தில் 47 ரன்களும் குவித்த மிட்சல் மார்ஷ் இந்த தொடரின் தொடர் நாயகன் விருதினை பெற்றார்.