
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 102 ரன்களையும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 50 ரன்களையும், ஸ்மிருதி மந்தனா மற்றும் ஹர்லீன் தியோல் தலா 45 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் பந்துவீச்சாளர்கள் அனைவரும் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியில் கேப்டன் நாட் ஸ்கைவர் பிரண்ட் 98 ரன்களையும், எம்மா லம்ப் 68 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் அந்த அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 305 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய மகளிர் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.