IND vs ENG: இரண்டாவது டெஸ்ட்லிருந்து விலகிய ராகுல், ஜடேஜா; சர்ஃப்ராஸ், சௌரவ், வாஷிக்கு வாய்ப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக இந்திய அணியின் கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் விலகியுள்ளனர்.
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே ஹைத்ராபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரின் ஆரம்பத்திலேயே 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதையடுத்து இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி வரும் பிப்ரவரி 2ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த முன்னணி வீரர்களான ஜடேஜா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது ரவீந்திர ஜடேஜா காயம் கடைந்தார்.
Trending
இதனால் அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதேசமயம் மற்றொரு இந்திய வீரரான கேஎல் ராகுலும் முதல் போட்டியில் காயமடைந்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனால் அவரும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியிலிருந்து விலகியுள்ளார். மேலும், இருவரின் காயத்தின் நிலை குறித்து பிசிசிஐ மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகியுள்ள ரவீந்திர ஜடேஜா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், சௌரவ் குமார் மற்றும் சர்ஃப்ராஸ் கான் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் சர்ஃப்ராஸ் கான் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணிக்காக முதல்முறையாக தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
KL Rahul and Ravindra Jadeja have been ruled out of the second test!
— CRICKETNMORE (@cricketnmore) January 29, 2024
Sarfaraz Khan, Sourabh Kumar and Washington Sundar have been added to India's squad#INDvENG #KLRahul #RavindraJadeja #SarfarazKhan #CricketTwitter pic.twitter.com/pQV5ne9ndB
முன்னதாக முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, முகமது ஷமி ஆகியோர் விலகிய நிலையில், தற்போது முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரும் காயம் காரணமாக விலகியுள்ளது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்த சர்ஃப்ராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
இந்திய அணி: ரோஹித் சர்மா (கே), ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பாரத், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா, அவேஷ் கான், ரஜத் பட்டிதார், சர்ஃப்ராஸ் கான், வாஷிங்டன் சுந்தர், சௌரப் குமார்.
Win Big, Make Your Cricket Tales Now