ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியானது டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரது சதங்கள் காரணமாக முதல் இன்னிங்ஸில் 445 ரன்களைச் சேர்த்து அல் அவுட்டானது.
இதில் அதிகபட்சாமாக டிராவிஸ் ஹெட் 152 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்களையும், அலெக்ஸ் கேசி 70 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 28 ஓவர்கள் வீசி 76 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள இந்திய அணியானது அஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இந்நிலையில் இப்போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சில சாதனைகளையும் படைத்துள்ளார். அதன்படி பிரிஸ்பேனில் நடைபெற்ற டெஸ்ட் இன்னிங்சில் 6 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார். இதற்கு முன்பு 1968ஆம் ஆண்டு சுழற்பந்து வீச்சாளர் ஈரப்பள்ளி பிரசன்னா 104 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.