காயமடைந்த வீரர்களின் உடற்தகுதி குறித்து அறிக்கை வெளியிட்ட பிசிசிஐ!
முக்கிய வீரர்களின் காயத்தை பற்றிய முழுமையான அறிவிப்பை பிசிசிஐ நேரடியாகவே வெளியிட்டு ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
இந்திய அணி சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், கடந்த 10 வருடமாக ஐசிசி தொடர்களில் தோல்வியை சந்தித்து வருவது ரசிகர்களுக்கு புரியாத புதிராக இருந்து வருகிறது. இந்த தோல்விகளுக்கு சுமாரான பேட்டிங், பவுலிங் என்பதை தாண்டி முக்கிய வீரர்கள் காயத்தால் வெளியேறியது முதன்மை காரணமாக அமைந்தது. எடுத்துக்காட்டாக ஜஸ்பிரித் பும்ரா இல்லாதது 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையை தொடர்ந்து 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியை பரிசளித்தது.
அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டு வந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கார் விபத்தில் காயமடைந்து வெளியேறியது 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவிற்கு தோல்வியை கொடுத்தது. இதுபோக கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய முக்கிய வீரர்களும் முக்கிய ஐசிசி தொடர்களுக்கு முன்பாக காயமடைந்து வெளியேறியது இந்தியாவின் வெற்றிக்கு கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு முன்பாவது இவர்கள் திரும்பி வருவார்களா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
Trending
அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த முக்கிய வீரர்களின் காயத்தை பற்றிய முழுமையான அறிவிப்பை பிசிசிஐ நேரடியாகவே வெளியிட்டு ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. ஏனெனில் இதற்கு முன் பும்ரா அடுத்த மாதம் நடைபெறும் அயர்லாந்து தொடரில் களமிறங்குவார் என்று பிசிசிஐக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து மறைமுகமான செய்தி மட்டுமே வெளிவந்தது.
இருப்பினும் தற்போது நேரடியாகவே ஜஸ்பிரித் பும்ரா மற்றும் பிரசித் கிருஷ்ணா காயத்தைப் பற்றி பிசிசிஐ தம்முடைய அதிகாரப்பூர்வமான இணைய பக்கத்தில் அறிவித்துள்ளது. அதன்படி, இந்த 2 வேகப்பந்து வீச்சாளர்களும் காயத்திலிருந்து குணமடையும் பகுதியின் கடைசி பாகத்தை தொட்டு வலைப்பயிற்சிகளில் முழுமூச்சுடன் விளையாடி வருகின்றனர். இதைத்தொடர்ந்து அவர்கள் பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் சில பயிற்சிப் போட்டிகளில் விளையாட உள்ளனர். அதில் பிசிசிஐ மருத்துவ குழுவினர் அவர்களை நேரில் கவனித்து இறுதி முடிவுகளை எடுப்பார்கள் என்று கூறியுள்ளது.
மேலும் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் காயம் பற்றி பிசிசிஐ கூறுகையில், தற்போது வலைப்பயிற்சியில் பேட்டிங்கை தொடங்கியுள்ள அவர்கள் பலம் மற்றும் ஃபிட்னஸ் பயிற்சிகளை துவங்கியுள்ளனர். பிசிசிஐ மருத்துவ குழு அவர்களுடைய முன்னேற்றத்தில் திருப்தியடைந்துள்ளது. மேலும் வரும் நாட்களில் அவர்களின் வலிமை மற்றும் கண்டிஷனிங் ஆகியவற்றில் முன்னேறுவதற்கான வேலைகள் அதிகரிக்கும் என்று கூறியுள்ளது.
Some Updates From BCCI!#Cricket #IndianCricket #TeamIndia #KLRahul #ShreyasIyer #RishabhPant #JaspritBumrah pic.twitter.com/BiNukN61TZ
— CRICKETNMORE (@cricketnmore) July 21, 2023
ரிஷப் பந்த் தன்னுடைய மறுவாழ்வில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமடைந்துள்ளார். அதன் காரணமாக மீண்டும் பேட்டிங் மற்றும் வலைப்பயிற்சியில் கீப்பிங் செய்வதையும் துவங்கியுள்ளார். மேலும் தற்போது அவர் வடிவமைக்கப்பட்ட உடற்பயிற்சி திட்டத்தையும் பின்பற்றுகிறார். அதில் வலிமை நெகிழ்வுத்தன்மை மற்றும் ஓட்டம் ஆகியவை அடங்கும் என்று கூறியுள்ளது.
இதற்கு முன் எந்த வீரர் என்ன காயத்தை சந்தித்தார் எந்தளவுக்கு குணமடைந்துள்ளார் என்பது போன்ற செய்திகள் என்சிஏவுக்கு உள்ளே மட்டுமே இருந்தது. இருப்பினும் அந்த நிலைமையை மாற்றி இப்படி வீரர்களின் காயத்தை பற்றி பிசிசிஐ வெளிப்படையாக அறிவித்துள்ளது அனைவரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. அதை விட இந்த அறிவிப்பின் வாயிலாக 5 வீரர்களும் காயத்திலிருந்து குணமடைந்து பயிற்சிகளை மேற்கொள்ள துவங்கியுள்ளது தெரிய வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now