
இந்திய அணி அடுத்த மாதம் வங்கதேசம் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பும்ராவுக்கு ஓய்வை நீட்டிக்க பிசிசிஐ முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியது. இந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.
இந்த தொடருக்காகவே தன்னை தயார்படுத்திக்கொள்ள பும்ராவிற்கு இந்த ஓய்வு அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியது. மேற்கொண்டு பும்ராவுக்கு பதிலாக இந்திய அணியில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை தயார் செய்ய இந்திய அணி முடிவெடுத்துள்ளது. இதில் அர்ஷ்தீப் சிங், கலீல் அஹ்மது மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் அந்தப் பட்டியலில் உள்ளனர். இதில் அர்ஷ்தீப் சிங்கின் பெயர் முன்னிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக இந்த வீரர்கள் அனைவரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான துலீப் கோப்பையில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் டி20 மற்றும் ஒருநாள் இரண்டிலும் தன்னை நிரூபித்த அர்ஷ்தீப், டெஸ்ட் அறிமுகத்திற்கான அங்கீகாரத்தை இத்தொடரில் பெறமுடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.