
ஐபிஎல் மினி ஏலத்திற்க்கு இன்னும் நான்கு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தங்கள் வீரர்கள் பட்டியலை இறுதி செய்ய வேண்டிய கடைசி நாள் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தாவினார்.
தற்போது குஜராத் அணியின் கேப்டனாக இருந்த பாண்டியா அணி மாறி இருக்கும் நிலையில் அவருக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன் பதவி அளிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. ரோஹித் சர்மா சிறந்த கேப்டனாக இதுவரை அந்த அணிக்கு ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்று கொடுத்து இருக்கிறார். அதே அணியில் தான் பும்ரா இருக்கிறார்.
ஹர்திக் பாண்டியா 2015 முதல் 2021 வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் தான் இருந்தார். அதன் பின் குஜராத் அணி புதிதாக சேர்க்கப்பட்ட போது அங்கே கேப்டனாக சென்றார். தற்போது மீண்டும் மும்பை அணிக்கே திரும்பி இருக்கிறார். ஆனால், பும்ரா பல ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு விலகாமல் அதே அணியில் நீடித்து வருகிறார். அதனால், ரோஹித் சர்மாவுக்கு பின் பும்ராவுக்கு அடுத்த ஆண்டு கேப்டன் பதவி கைமாறும் என கூறப்பட்டு வந்தது.