
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியானது டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரது சதங்கள் காரணமாக முதல் இன்னிங்ஸில் 445 ரன்களைச் சேர்த்து அல் அவுட்டானது.
இதில் அதிகபட்சாமாக டிராவிஸ் ஹெட் 152 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்களையும், அலெக்ஸ் கேசி 70 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 28 ஓவர்கள் வீசி 76 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள இந்திய அணியானது அஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்னிலும், ஷுப்மன் கில் ஒரு ரன்னிலும், விராட் கோலி 3 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்தும் 9 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் தொடர் மழை காரணமாக மூன்றாம் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடிவடைந்ததாக அறிவிக்கப்பது. இதனால் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்களை மட்டுமே சேர்த்து தடுமாறி வருகிறது.