
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இத்தொடரை வென்ற கையோடு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி இருவரும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர்.
இருப்பினும் இவ்விரு வீரர்களும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் இந்திய அணியானது அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக தயாராகி வருகிறது. அதன்படி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கொண்டு ஐசிசி தரவரிசையில் டாப் 8 இடங்களைப் பிடித்துள்ள அணிகள் பலப்பரீட்சை நடத்தும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் நிச்சயம் விளையாடுவார்கள் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.