
அயர்லாந்து மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மகளிர் ஒருநாள் போட்டிகளுக்கான புதுபிக்கப்பட்ட வீராங்கனைகள் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வோல்வார்ட் முதலிடத்தில் தொடர்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் இலங்கை அணியின் சமாரி அத்தபத்துவும், இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவும் உள்ளனர்.
இந்நிலையில் இங்கிலாந்து தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய வீராக்கனை அலிசா ஹீலி 4 இடங்கள் முன்னேறி 5ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். மேற்கொண்டு அயர்லாந்து அணி கேப்டன் கேபி லூயிஸ் 4 இடங்கள் முன்னேறி 16ஆவது இடத்திற்கும், இந்திய வீராங்கனைகள் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 3 இடங்கள் முன்னேறி 19ஆம் இடத்தையும், பிரதிகா ராவல் 52 இடங்கள் முன்னேறி 65ஆம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.