
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில், மூன்று போட்டிகள் முடிவடைந்துவிட்டன. நான்காவது டெஸ்ட் போட்டி வருகிற மார்ச் ஒன்பதாம் தேதி அகமதாபாத் மைதானத்தில் தொடங்குகிறது. அதன் பிறகு மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவிருக்கிறது. இதில் பங்கிருக்கும் இரு அணி வீரர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டு விட்டன.
டெஸ்ட் தொடரின்போது ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சிலர் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்தனர். ஆகையால் முதல் 2 டெஸ்டில் சிறந்த பிளேயிங் லெவனை எடுக்க முடியாமல் திணறி வந்தனர். இதற்கிடையில் கேப்டன் பாட் கம்மின்ஸ், சொந்த காரணங்களுக்காக நாடு திரும்பியிருப்பதால் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடமாட்டார் என்றும் கூறப்பட்டது. ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பொறுப்பு ஏற்று விளையாடுகிறார்.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்த மிச்சல் ஸ்டார்க் மற்றும் கேமரூன் கிரீன் இருவரும் காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்பிவிட்டனர். ஆகையால், ஒருநாள் தொடரிலும் இவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. காயத்தால் முன்னணி வீரர்கள் இல்லாமல் ஆஸ்திரேலிய அணி அவதிப்பட்டு வரும் நிலையில், அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜெய் ரிச்சர்ட்சன் காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.