
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கான்வே 2 ரன்னும், கேப்டன் டாம் லாதம் 47 ரன்னும், ரச்சின் ரவீந்திரா 34 ரன்னும் எடுத்தும் விக்கெட்டை இழந்தனர்.
அதேசமயம் இப்போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் மூன்றாம் வரிசையில் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியதியதுடன் 93 ரன்னில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பினைத் தவறவிட்டார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய டேரில் மிட்செல் 19, டாம் பிளெண்டல் 17, நாதன் ஸ்மித் 3, மேட் ஹென்றி 18 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த கிளென் பிலிப்ஸ் - டிம் சௌதி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 319 ரன்களைக் குவித்துள்ளது.இதில் கிளென் பிலீப்ஸ் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 41 ரன்களையும், டிம் சௌதீ 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஷொயப் பஷீர் 4 விக்கெட்டுகளையும், கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.