
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது முதல் இன்னிங்ஸில் 556 ரன்கலைக் குவித்தது.
இதில் அதிகபட்சமாக ஷான் மசூத் 151 ரன்களையும், அப்துல்லா ஷஃபிக் 102 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அகா சல்மான் 104 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஜக் லீச் 3 விக்கெட்டுகளையும், பிரைடன் கார்ஸ் மற்றும் கஸ் அட்கின்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியில் கேப்டன் ஒல்லி போப் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து அணியின் மற்றொரு தொடக்க வீரர் ஸாக் கிரௌலி 78 ரன்களில் விக்கெட்டைஇழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பென் டக்கெட்டும் அதிரடியாக விளையாடி தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், 84 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ஆனாலும் இப்போட்டியில் அபாரமாக விளையடி வந்த ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 35ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.