
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது லண்டனில் உள்ள லார்ஸ்ட் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த் இங்கிலாந்து அணியானது ஜோ ரூட் மற்றும் கஸ் அட்கின்சனின் அபாரமான சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 427 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் 143 ரன்களையும், கஸ் அட்கின்சன் 118 ரன்களையும் சேர்த்தனர். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கி விளையாடி வரும் இலங்கை அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் கமிந்து மெண்டிஸ் 74 ரன்களை எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, இலங்கை அணியானது முதல் இன்னிங்ஸில் 196 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டை இழந்து தடுமாறியது. அதேசமயம் நான்காவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஜோ ரூட் அபாரமாக விளையாடியதுடன் சர்வதேச டெஸ்ட் கிரிகெட்டில் தனது 34ஆவது சதத்தையும் பதிவுசெய்து மிரட்டினார். இதன் மூலம் இங்கிலாந்து அணியானது 251 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.