-mdl.jpg)
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டிலும் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.
இந்த போட்டியிலும், இங்கிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை முழுமையாக கைப்பற்றும் என்பதாலும், இலங்கை அணி வெற்றி பெற்று ஆறுதலை தேட முயற்சிக்கும் என்பதாலும் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இதனால் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. முன்னதாக இப்போட்டியில் விளையாடும் இங்கிலாந்து, இலங்கை அணிகளின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதன்படி, இந்தப் போட்டியில் ரூட் கேட்ச் எடுத்தால், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்ச்களை எடுத்தவர் என்ற அடிப்படையில் ஜாக் காலிஸை விஞ்சி மூன்றாவது இடத்தை அடைவார். தற்போது இரு வீரர்களும் 200 கேட்ச்களுடன் கூட்டாக மூன்றாவது இடத்தில் உள்ளனர். மேலும் டெஸ்டில் அதிக கேட்சுகள் எடுத்த சாதனை ராகுல் டிராவிட் பெயரில் உள்ளது, அவர் 210 கேட்சுகளை எடுத்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் இலங்கையின் மஹேல ஜெயவர்த்தனே 205 கேட்சுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.